செய்யூர் அருகே நைனார் குப்பம் கிராமத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் இல்லாததால் மர்மநபர்கள் அட்டகாசம்

செய்யூர்: செய்யூர் அருகே நைனார் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளி நுழைவு பகுதியில் மட்டும் மதில்சுவர் எழுப்பி, நுழைவாயில் கதவுகள் பொருத்தப்பட்டது.

ஆனால், மற்ற 3 புறமும் திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், இரவு மற்றும் பகல் நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து மது அருந்துதல், கழிப்பறைகளை அசுத்தம் செய்தல், பாலியல் விவகாரம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டு கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகளோ, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், இப்பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: