×

7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வராமல் வெறிச்சோடிய தற்காலிக மார்க்கெட்

காஞ்சிபுரம்: கொரோனா கட்டுப்பாடுகளால் நசரத்பேட்டை பச்சையப்பன் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மார்க்கெட், காஞ்சிபுரத்தில் இருந்து 7 கிமீ தூரத்தி் அமைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.அதேநேரத்தில் ரயில்வே சாலையில் பழைய ரயில் நிலையம் அருகில் இருபுறமும் கடைகளை வைத்துள்ளதால் நெருக்கடி ஏற்பட்டு சமூக இடைவெளி கேள்விக்குறி ஆகியுள்ளது. காஞ்சிபுரத்தில் பழமையான ராஜாஜி மார்க்கெட், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வையாவூர் சாலையில் மாற்றப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியாக இருந்ததால் சிறுமழைக்கே சேறும் சகதியுமாக மாறியது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு, தற்காலிக மார்க்கெட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு கடைகளை ஒதுக்குவதில் ஆளுங்கட்சியினர் தலையீட்டால், கடந்த சில நாட்களுக்கு முன் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சப் கலெக்டர் சரவணன், அவர்களிடம் சமரசம் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்தார்.இந்நிலையில் நசரத்பேட்டை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.
மேலும், தற்காலிக மார்க்கெட் காஞ்சிபுரம் நகரில் இருந்து சுமார் 7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் ரயில்வே சாலையில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு, காய்கறி வாங்க 7 கிமீ தூரம் மீண்டும் செல்வதற்கு தயங்குகின்றனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் ரயில்வே சாலையின் இருபுறமும் வியாபாரிகள் காய்கறி கடைகளை வைத்துள்ளனர். இதனால், சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் காலை நேரத்தில் இங்கு கூட்டமாக வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் சமூக இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு, கடைகள் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : Public, Temporary Market
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...