×

கிராம ஊராட்சிகளுக்கான பணிகளில் பேக்கேஜ் டெண்டரை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை:  மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன் உள்ளிட்ட 29 ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழ்நாடு பஞ்சாயத்து விதிப்படி, கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலமாகவே நடக்க வேண்டும். ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கலெக்டரின் ஒப்புதலுடன் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடக்காததால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி சிறப்பு அலுவலர்களாக செயல்பட்டனர். இவர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜன. 20 முதல் ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், வளர்ச்சிப் பணிகள் ஊராட்சித் தலைவரிடமிருந்து கூடுதல் ஆட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் மொத்தமாக சேர்க்கப்பட்டு பேக்கேஜ் டெண்டர் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. ஒரு ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் அந்தந்த ஊராட்சி மூலமே நடத்தப்பட வேண்டும். எனவே, ஊராட்சிகளில் பேக்கேஜ் டெண்டர் ஒதுக்க தடை விதிக்க வேண்டும். ஊராட்சி பணிகளை அந்தந்த ஊராட்சி மூலமே மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். மனுவிற்கு மதுரை கலெக்டர், கூடுதல் கலெக்டர்  தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Government , Village Panchayat, Package Tender, Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...