×

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி, வேலை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவித்தப்படி ரூ.50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையையும் முதல்வர் உடனடியாக வழங்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி-தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலில் அறிவித்த முதலமைச்சர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் ரூ.50 லட்சம் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என்று ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் மீண்டுள்ளார்கள்; சிலர் மாண்டுள்ளார்கள். ஆனால் இதுவரை அரசு தரப்பிலோ அல்லது அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகவோ வெளியிடப்படும் அறிக்கையிலோ  (கொரோனா புல்லட்டின்) முன்களப் பணியாளர்கள் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டனர்-அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் இடம் பெறுவதில்லை. அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகிறது அதிமுக அரசு.

கொரோனா நோய்ச் சிகிச்சைப்  பணியில் தொற்றுக்குள்ளாகி-குணமடைந்து- இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதல்வர் உறுதியளித்த ரூ.2 லட்சம் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சமும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது என்று எந்த தகவல்களையும் வெளியிடாமல்-அந்த தகவல்களை எல்லாம் இரும்புத் திரை போட்டு பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.

அநாவசியமான-அவசர டெண்டர்களுக்கும்-ஊழல் காரியங்களுக்கும் நிதி ஒதுக்குவதைத் தள்ளி வைத்து விட்டு, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான ரூ.2 லட்சம், உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Tags : veterans ,families ,blockade ,MK Stalin ,Corona , Corona, Family of Forward Veterans, Funding, Work, Chief, MK Stalin
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...