இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே அபார வெற்றி

கொழும்பு:  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் காலை முதல் எண்ணப்பட்டன. இதன் முடிவுகளை இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி, மகிந்தா ராஜபக்சே தலைமையிலான லங்கா மக்கள் கட்சி, தேர்தல் நடந்த 196 இடங்களில் 145 இடங்களை தனித்தே பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான புதுஜன கட்சி 5 இடங்களை பிடித்தது. இதன் மூலம், இக்கூட்டணி மொத்தமாக 150 இடங்களை பிடித்துள்ளன.  இந்நாட்டில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 18ஐ இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.

எஞ்சியுள்ள இடங்களை மற்ற கட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளன. ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மட்டும் தனித்தே, பதிவான மொத்த வாக்குகளில் 59.9 சதவீதத்தை பெற்றுள்ளது. ரணில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாசாவின் ‘சமகி ஜனதா பாலவேகயா’ என்ற புதிய கட்சி, 55 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு 23 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த தமிழ் கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்தையும் (கடந்த முறை 16), மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா 3 இடங்களை பிடித்து (கடந்த முறை 6) 4வது இடத்தையும் பிடித்தன.

இந்த அமோக வெற்றியின் மூலம், இலங்கை நாடே ராஜபக்சே குடும்பத்தின் வசமாகி இருக்கிறது. ஏற்கனவே, மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக இருக்கிறார். தற்போது, மிருக பலத்துடன் மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இவருடைய வெற்றிக்கு நேற்றிரவே முதல் தலைவராக, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

ரணில் படுதோல்வி

இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட இது வெற்றி பெறவில்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில், 5வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

Related Stories:

>