×

நான் ஒரு சாமியார், இந்து என்பதால் பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்ல மாட்டேன்: யோகி கருத்தால் பெரும் சர்ச்சை

லக்னோ: ‘நான் ஒரு சாமியார்; ஒரு இந்துவும் கூட. அப்படி இருக்கும்போது, மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு எப்படி செல்ல முடியும்?’ என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த புதன்கிழமை கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, புதிதாக பாபர் மசூதி கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை சன்னி வக்பு வாரியம் தொடங்கி இருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை தனியார் டிவி சேனலுக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்தார். அப்போது, ‘புதிய பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வீர்களா?’ என கேட்கப்பட்டது.

இதற்கு யோகி அளித்த பதிலில், ‘‘நான் ஒரு சாமியார், ஒரு இந்து என்ற வகையில், இந்த விழாவுக்கு என்னால் செல்ல முடியாது. ஒரு முதல்வர் என்ற வகையில், எந்தவொரு ஜாதி, மத இன நம்பிக்கை இன்றி, இந்த விழாவுக்கு செல்வேன். ஆனால், விழாவுக்கு அவர்கள் என்னை அழைப்பாளர்களா? என்பது சந்தேகமே. அவர்கள் என்னை அழைத்தால், பலரின் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படும். அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை,’’ என்றார். யோகியின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ ஒட்டுமொத்த உபி.க்கும்தான் யோகி முதல்வர். அவர் எந்த மதத்துக்கும் சார்பாகவும்  இருக்கக் கூடாது. தனது கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என்று சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.



Tags : preacher ,Babri Masjid Foundation Ceremony ,Yogi ,Samiyar , I am a preacher, Hindu, Babri Masjid Foundation Ceremony, Yogi
× RELATED நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென...