×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் நல சங்கம் அமைப்பின்  சார்பில் கே.ஆர்.செல்வராஜ் குமார் தாக்கல் செய்த மனுவில், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பு வக்கீல், கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்கக் கூடும் என்பதால், வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வரைவு அறிக்கையின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது. கர்நாடகா உயர் நீதிமன்றம் தடையை நீக்கினால் நீதிமன்றத்தை அணுகலாம். மேலும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா, உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து இந்த நீதிமன்றம் சேர்க்கிறது என்று உத்தரவிட்டு விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : draft ,EIA ,Government , Environmental Impact Assessment Draft, Tamil, Central Government, Icord
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...