×

10ம் வகுப்பு தேர்வு முடிவு: வரும் 10ம் தேதி வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக மார்ச் 27ம் தேதிநடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அத்துடன் தேர்ச்சி மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு,அரையாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களை தேர்வுத்துறை கேட்டது. கடந்த மாதம் அவை பெறப்பட்டு மதிப்பெண்கள் கணக்கிடும் பணி தொடங்கியது. கடந்த வாரம் அந்த பணிகள் முடிந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை 10ம் தேதி வெளியிடப் போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 10ம் தேதி காலை 9.30மணிக்கு வெளியிடப்படுகிறது.மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம் வருடம் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.இதற்காக www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணைய தளங்களில் இருந்து முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதாவது இருந்தால், 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை, அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக குறை தீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அரசுத் தேர்வுத்துறை இணைய தளம் www.dge.tn.gov.in  மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பொருத்தவரையில் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வழியாக தங்கள் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

Tags : 10th Class Exam,Results
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...