×

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் மார்க்கெட் திறப்பு

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையம் இரு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நயினார்குளம் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு சரக்குகளை இறக்கி வியாபாரம் நடத்தினர். நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் சமீபகாலமாக புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்தது. துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி மார்க்கெட் மூடப்பட்டது. புதிய பஸ் நிலையமும் சுற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். கடந்த 15 தினங்களாக வியாபாரிகள் நெல்லையில் உள்ள தனியார் ஆம்னி பஸ் நிலையத்தில் வைத்து வியாபாரம் நடத்தினர். சில வியாபாரிகள் நயினார்குளம் கரையோரத்தில் தற்காலிக கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர். இந்நிலையில் நேற்று நெல்லை புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. வியாபாரிகள் முன்பு போல் காய்கறிகளை அங்கு வைத்து வியாபாரத்தை தொடங்கினர். 15 தினங்களுக்கு பின்னர் மார்க்கெட் திறப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சரக்கு லாரிகள் அனைத்தும் நேற்று வழக்கம்போல் புதிய பஸ் நிலையத்திற்கு வர தொடங்கின.

டவுன் மார்க்கெட்டும் திறப்பு
நெல்லை டவுன் நேதாஜி போஸ் தற்காலிக திறந்தவெளி சந்தை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே புதியதாக அமைக்கப்பட்டு வந்தது. நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன் முன்னிலையில் மார்க்கெட் நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்கெட் செயல் தலைவர் மாலைராஜா, நெல்லை மாநகர அனைத்து உள்ளாட்சி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சாலமோன், போஸ் மார்க்கெட் தலைவர் சத்தியநாராயணா, செயலாளர் பால்ராஜ், நெல்லை வணிகர் சங்க பேரமைப்பு மாநகர தலைவர் குணசேகரன், மாநில இணைசெயலாளர் நயன்சிங், மாவட்ட செயலாளர் விநாயகம், நுகர்பொருள் வினியோக சங்க மாநில தலைவர் வெங்கடேஷ், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மில்க்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சந்தை திறந்தவுடன் அப்பகுதியில் வாழைக்காய் வியாபாரம் தொடங்கி வைக்கப்பட்டது.

Tags : bus station ,Nellie , Nellai, market ,new bus station
× RELATED நெல்லை சந்திப்பில் கழிப்பறைகளே இல்லை...