×

நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான கழிவுகள்

வேலூர்: கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக பயணித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்ேபட்டை மாவட்டங்கள் வழியாக தமிழகத்தில் ஓடி வரும் பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. ஒரு காலத்தில் பழைய வடஆற்காடு மாவட்டத்தை தன் பெயருக்குப் பொருத்தமாக செழிக்க வைத்த பாலாறு, இன்றைக்கு சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டுக்கிடக்கிறது.  மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. தினம் தினம் நடக்கும் மணல் கொள்ளையால் பாலாற்றில் பல இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய பாலாற்றில் காலப்போக்கில் நீர்வரத்து குறைந்தது.

ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை, கட்டுமான கழிவுகள் என பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இன்றைக்கு அழிவின் பிடியில் பாலாறு சிக்கித் திணறுகிறது. இந்நிலையில் தற்போது மாநகரின் பல பகுதிகளில் இடிக்கப்படும் கட்டுமான கழிவுகள் நாள்தோறும் பாலாற்றில் கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் வகையில் உள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டுமான கழிவுகளும், பாலாற்றில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த பாலாறு குப்பை, இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. பாலாற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்தொரு நடவடிக்கையும் எடுத்தமாதிரி தெரியவில்லை. இதனால், தனிநபர் மட்டுமின்றி மாநகராட்சி சார்பில் குப்பைகள், கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே குப்பை, கட்டுமான கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : lake , groundwater. Construction waste .
× RELATED திருப்பத்தூரில் சுகாதார சீர்கேடு:...