×

கொரோனா ஊரடங்கால் கோடிகளை கொட்டித்தரும் மொய் விருந்து நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதிகளில் மொய் விருந்து கலாசாரம் அதிக அளவில் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி வரை வசூல் நடக்கும். கடந்த ஆண்டு வடகாட்டில் நடந்த மொய் விருந்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 4.5 கோடி ரூபாய் வசூலானது. ஆனி, ஆடி, ஆவணி, மாதங்களில் மொய் விருந்து விழா களைகட்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவரை மீட்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த மொய் விருந்து காலப்போக்கில் கவுரவ பிரச்னையாக மாறியது. கடந்த ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. இதில், சமையல் கலைஞர்கள், மொய் எழுத்தர்கள் உள்ளிட்டோர் பயனடைவர்கள். இதனால் இந்த சீசன்களில் பலருக்கு வேலை வாய்ப்பு அதிக அளவு கிடைக்க கூடும். மேலும் அரிசி, மளிகைபொருட்கள், கோழி, ஆட்டு கறிகளின் விற்பனையும் அதிக அளவில் இருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில் விவசாயிகளுக்கு வருமானத்தை தரும் பலா, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் அழிந்ததால் கடந்த ஆண்டு மொய் வசூல் குறைந்தது. இதில் சிலபேர் கடன் வாங்கி மொய் செய்தனர். சிலபேர் மொய் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு மொய் விருந்தில் மொய் வசூல் கிடைக்கும் என பலர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடிகளை கொட்டித்தரும் மொய் விருந்து விழா முதல் முறையாக தடைப்பட்டுள்ளது. பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி, இந்த ஆண்டு மொய் விருந்து நடத்த இருந்தவர்கள் கூறியதாவது: எங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆண்டுக்கு ஒருமுறை மொய் விருந்து நடத்துவது வழக்கம்.

இந்த பணத்தை கொண்டு திருமணம், தொழில், விவசாயம், கல்வி போன்றவற்றுக்கு பயன்படுத்தி வருவோம். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயத்தில் விளைவிக்ககூடிய பொருட்கள் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், போதிய வருமானமின்றி இருப்பதாலும், கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மதித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த மொய் விருந்து முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு அளிக்கும் வரும் வரை மொய்விருந்து இருக்காது. உத்தரவு வந்தால் தை மாதம் மொய் விருந்து நடத்த வாய்ப்பு இருக்கும் என்றனர்.

கடந்த ஆண்டு வடகாட்டில் நடந்த மொய் விருந்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு 4.5 கோடி ரூபாய் வசூலானது. ஆனி, ஆடி, ஆவணி, மாதங்களில் மொய் விருந்து விழா களைகட்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பவரை மீட்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த மொய் விருந்து காலப்போக்கில் கவுரவ பிரச்னையாக மாறியது.

Tags : Corona ,party stop ,party , Corona , moi party ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...