×

நீலகிரியில் தொடர் மழை எதிரொலி 300 கிராமங்கள் இருளில் மூழ்கின

ஊட்டி: நீலகிரியில் நேற்று காற்று மற்றும் மழையின் தாக்கம் குறைந்த போதிலும், மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால், 4 நாட்களாக மின்சாரம் இன்றி பல கிராம மக்கள் தவித்து வருகின்றனர். நீலகிரியில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கவில்லை. மாறாக கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் இந்த மாதம் துவக்கம் முதல் பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் காற்றின் வேகமும்,  மழையின் வேகமும் சற்று குறைந்தது. நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி,  அவலாஞ்சி, எமரால்டு போன்ற பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழை ெபய்து  வருகிறது. தொடர் மழை, காற்று காரணமாக குளிரும்  அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் மின் கம்பிகள் மீதும், மின் கம்பங்கள் மீதும் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோதிலும், நேற்றும் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. சில இடங்களில் 4 நாட்களாக மின் வினியோகம் இன்றி பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து கோத்தகிரி  செல்லும் சாலையில் தொட்டபெட்டா மற்றும் கோடப்பமந்து பகுதிகளில் மரம்  விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல ஊட்டியிலிருந்து  கூடலூர் செல்லும் சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. இச்சாலையில்  இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் 9 முகாம்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அணைகள் நிரம்புகின்றன
அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு போன்ற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அணைகளும் மளமளவென நிரம்பத் துவங்கியுள்ளன.

எமரால்டு அணைக்கு ஆபத்து?
எமரால்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மின் வாரிய குடியிருப்பு மற்றும் சத்யா நகர் பகுதியில் எமரால்டு அணையை ஒட்டி மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்படுவதுடன் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு மண் குவியல்கள் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 50 ஆண்டு பழைமை வாய்ந்த மின்வாரிய குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. அணையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எமரால்டு அணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மின்வாரிய துறையினர் அச்சமடைந்து உள்ளனர்.

பசுந்தேயிலை கொள்முதல் நிறுத்தம்
‌நீலகிரி மாவட்டத்தில் இன்ட்க்கோ சர்வ் கட்டுபாட்டில் மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் சிறு,குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தேயிலை தொழிற்சாலைகளை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

நீலகிரியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வரும் நிலையில் மரங்கள் விழும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


எனவே இன்ட்க்கோ சர்வ் அடுத்த 2 நாட்களுக்கு பசுந்தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் சில கூட்டுறவு தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளன.

மழை அளவு
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.ல் வருமாறு: ஊட்டி 42, நடுவட்டம் 226, குந்தா 58, அவலாஞ்சி 581, எமரால்டு 175, அப்பர்பவானி 319, குன்னூர் 9, கூடலூர் 335, தேவாலா 220, பந்தலூர் 181. நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 3,723 மி.மீ. சராசரி 111 மி.மீ. ஆகும்.

Tags : villages ,Nilgiris ,rains Rain ,Nilgiris 300 , Nilgiris ,300 villages , darkness
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...