×

சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு: அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இ-பாஸ் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் பயணிகள் மணிக்கணக்கில் தவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக இ-பாஸ் சிறப்பு கவுன்டர்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இயங்கி வருகிறது. இதில், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து 173 பயணிகளுடன் ஒரு விமானமும், காலை 8.30 மணிக்கு 166 பயணிகளுடன் மற்றொரு ஐதராபாத் விமானமும் சென்னை வந்தன. அதில் வந்த பயணிகள், இ-பாஸை காட்டிவிட்டு வெளியே சென்றனர். ஆனால், 100க்கும் மேற்பட்ட பயணிகளிடம் இ-பாஸ் இல்லை. மத்திய அரசு அறிவிப்பின்படி, பல மாநிலங்களில் இ-பாஸ் நடைமுறையில் இல்லை என்றாலும் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.

இதனால் இ-பாஸ் இல்லாமல் வந்த பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. அதனால் அவர்கள், இ-பாஸ் கவுன்டருக்கு சென்றனர். அங்கு பணியாளர்கள் இல்லை. உடனே அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறி விட்டனர். நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள், ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ‘இரவு பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். காலை பணிக்கு வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை’ என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயணிகளை சமாதானப்படுத்தினர். அதோடு பயணிகளின் செல்போன்களில் இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவிறக்கம் செய்து வெளியே அனுப்பினர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags : Passengers ,airport ,Chennai , Chennai, Airport, e-pass counter, staff, passenger suffering:, Officer, heated argument
× RELATED அறிவிப்பு இல்லாததால் அரசு பஸ்சில் செல்லாத விமான பயணிகள்