×

135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா? விபத்தா?

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 135 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்த வெடி சம்பவம் தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா?’ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், கடந்த 2013ம் ஆண்டு சரக்கு கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட், துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு, இது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சேமிப்பு கிடங்கு, அதன் அருகில் இருந்த கட்டிடங்கள் தூள் தூளாகி தரைமட்டமாகின. இந்த சம்பவத்தில் 135 பேர் பலியாகினர். 5,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சி, ஊழல், திறமையற்ற நிர்வாகம், கொரோனா வைரஸ் தாக்குதல் என திணறி வரும் லெபனான், இந்த வெடிவிபத்து சேதத்தில் இருந்து மீள்வதற்கு  குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த அமோனியம் நைட்ரேட்டை கிடங்கில் வைத்திருந்தது ஏன் கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாதிகள் யாராவது இதை பயன்படுத்தி வெடிக்க வைத்தார்களா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்நாட்டு பிரதமர்  ஹசன் தியாப் உத்தரவிட்டுள்ளார். மேலும், துறைமுக பொறுப்பு உயரதிகாரிகளை வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

* அரசின் அலட்சியமே காரணம்
அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக துறைமுக அதிகாரிகள் மீது லெபனான் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அப்புறப்படுத்தும்படி அரசுக்கு துறைமுக அதிகாரிகள் பலமுறை எழுதிய கடிதங்கள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

Tags : incident ,attack ,Beirut ,Accident , 135 killed, Beirut incident, attack? Accident?
× RELATED விகேபுரம், பாபநாசத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 2 முதியவர்கள் சாவு