கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச்சில் மூடப்பட்ட யோகா மையங்கள், ஜிம்கள் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் 10ம் தேதியில் இருந்து இவை திறக்கப்படுகின்றன. வீடுகளிலேயே முடங்கி கிடந்த இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் ஜிம், யோகா மையங்கள் செல்ல தயாராகி விட்டனர். நாடு முழுவதும் அடுத்த ஓராண்டுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற நிலையில், ஜிம்களில், உடற்பயிற்சின் போதும் இதை கட்டாயம் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதில், ‘கூடாது’ என்பதுதான். இதை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வதால், பல்வேறு பாதகங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் கூறுவது என்ன?
* உடற்பயிற்சியில் ஈடுபடும்போது சுவாசத்தின் வேகம் அதிகரிக்கும்.
* இதய துடிப்பும் அதிகரிக்கும்.
* அப்போது, முகக்கவசம் அணிந்திருந்தால் வேகமாக சுவாசிக்க முடியாது.
* இதனால், நுரையீரலுக்கு செல்லும் காற்றில் ஆக்சிஜன் அளவு குறையும்.
* அப்படி நடந்தால், மூச்சுத் திணறும்.
* தலைவலி ஏற்படும். சில நேரங்களில் தலைசுற்றல் ஏற்படும்.
* போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் நெஞ்சு வலிக்கும்.
* ஆக்சிஜன் பற்றாக்குறையால், சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
* எனவே, கடுமையான உடற்பயிற்சியின் போது முகக்கவசம் அணிவது, மருத்துவ ரீதியாக ஆபத்தானது.
* சாத்தியம் கிடையாது
மருத்துவ நிபுணர்கள் மேலும் கூறுகையில், ‘‘ஜிம்களில் ஒவ்வொரு நபர் பயிற்சி முடித்ததும், அந்த உபகரணங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது என்பதும் இயலாத காரியம். இதுபோன்று ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்தும்போது, வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சமூக இடைவெளி, உடற்பயிற்சி கருவிகளுக்கு இடையிலான தூரம் அதிகரிப்பு போன்றவற்றை கடைப்பிடித்தாலும், மக்கள் அதை பின்பற்றுவது சிரமமான காரியம்,’’ என்றனர்.
* உரிமையாளர்கள் உறுதி
உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘அரசின் அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றியும்,தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். வைரசை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஜிம்மிற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,’’ என்றனர்.