×

விவசாயிகளுக்கான கிஸான் ரயில் சேவை இன்று தொடங்குகிறது

புதுடெல்லி: விவசாயிகள் நலனுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, கிசான் ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. விவசாய உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, நாடு முழுவதும் ‘கிசான் சிறப்பு ரயில்’கள் இயக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இவை குளிர் சாதன வசதி கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதன்படி, இந்த கிசான் ரயில் சேவை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாட்டின் முதல் கிசான் ரயில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேவ்லாலி நகரில் இருந்து புறப்பட்டு, பீகார் மாநிலத்தில் உள்ள தனப்பூருக்குச் செல்கிறது.

காலை 11 மணிக்கு தேவ்லாலியில் கிளம்பும் ரயில், மறுநாள் மாலை 6.45க்கு தனப்பூரைச் சென்றடையும். மொத்தம் 1,519 கிமீ தூரத்தை, இந்த ரயில் 31.45 மணி நேரத்தில் அடையும். மேலும், நாசிக், மன்மாத், ஜால்கான், புசாவல், புர்கான்பூர், கந்த்வா, ஜபல்பூர், சட்னா, மாணிக்பூர், பிரக்யாராஜ் என பல நகரங்களில் நின்று செல்லும். இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளையும் அழுகும் தன்மை கொண்ட காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக மற்ற ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்கலாம். இதன் மூலம், அவர்களின் வருமானத்தை பெருக்க, மத்திய அரசு வழி வகுத்துள்ளது.

* மம்தாவின் கனவுத் திட்டம்
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சில விவசாய உற்பத்திப் பொருட்கள் விரைவில் அழுகி விடுவதால், விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். உள்ளூர் சந்தைகளில் இவற்றுக்கு நல்ல விலை கிடைக்காத நிலையில், வெளியூர்களுக்கு எடுத்துச் சென்று விற்பதில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. இவற்றை தவிர்த்து, விவசாயிகள் லாபம் பெறுவதற்காக, ரயில்களில் ‘குளிர்சாதன வசதி கொண்ட பார்சல் பெட்டி’ இணைக்கப்படும் என்ற திட்டத்தை 2019-2010ம் ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், அத்திட்டத்தை அவரால் அமல்படுத்த முடியவில்லை. அந்த திட்டம், குளிர்சாசன வசதி கொண்ட பெட்டியாக இல்லாமல், 10 ஆண்டுகள் கழித்து சிறப்பு ரயிலாகவே பாஜ ஆட்சியில் இப்போது அமலுக்கு வந்துள்ளது. 


Tags : Farmer, Kisan train service, today, starts
× RELATED உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்