×

பெய்ரூட்டை போல சென்னையை மிரட்டும் ஆபத்து: துறைமுக கிடங்கில் 740 டன் வெடிமருந்து: 6 ஆண்டுகளாக இருப்பு; பொதுமக்கள் கடும் பீதி

சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் விபத்து ஏற்பட்டு பல நூறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் அபாயகரமான நிலையில் வைக்கப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென வெடித்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானார்கள். சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துள்ளனர்.

அந்த இடம் முழுவதும் பாலைவனம் போல் ஆகிவிட்டது. வீடுகள், கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து நாசமானதில் எந்த பொருளும் மிஞ்சவில்லை. அந்த நகரத்தின் ஒரு பகுதி உருக்குலைந்து காணப்படுகிறது. பெய்ரூட் துறைமுகத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த வெடிவிபத்து உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. இந்த துன்ப சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறைவதற்குள் சென்னையிலும் இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். காரணம் கடந்த 2014ல் கரூரை சேர்ந்த ஒரு நிறுவனம் 740 டன் அமோனியம் நைட்ரேட் கெமிக்கல்லை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தது. இந்த அபாயகரமான கெமிக்கல் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு மணலி துறைமுக குடோன்களில் உள்ளன.

இந்த கெமிக்கல்லை உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததால் அவற்றை சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்துள்ளது. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும் இந்த அபாயகரமான கெமிக்கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ, அழிக்கவோ சுங்கத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. லெபனானில் 2013 முதல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது அமோனியம் நைட்ரேட் மீது அதிக வெப்பநிலை ஏற்பட்டு வெடிவிபத்து நடந்ததாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திலும் கடந்த 2014 முதல் இந்த கெமிக்கல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட் வெடித்தால் சென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்நிலையில், பெட்ரோலியம் வெடிபொருள் பாதுகாப்பு கழகம் தற்போது இந்த வெடிபொருள் தொடர்பான விபரங்களையும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. உரத்தொழிற்சாலைக்கு மட்டுமல்லாமல் குவாரி போன்றவற்றில் பயன்படுத்தும் வெடிபொருள்களை தயாரிப்பதற்காகவும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுவதால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று துறைமுக ஊழியர்களும் அதிகாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

லெபனானில் ஏற்பட்ட பெரும் விபத்தின் உக்கிரம் தெரிந்த பிறகும் சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பில்லாமல் உள்ள அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் இருப்பது சென்னை மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரோட்டை ஏலத்தில் விட சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* எதற்கு பயன்படுகிறது?
அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3. இயற்கையாகவே கிடைக்கும் இந்த மூலப்பொருள் உலகம் முழுவதும் பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் உருவாக்கப்படுகிறது. அம்மோனியம் நைட்ரேட் பெரும்பாலும், விவசாயம் மற்றும் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக அம்மோனியம் நைட்ரேட் உரமாக பயன்படுத்தப்படும் நிலையில், கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் உதவுகிறது. இருப்பினும், அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இது எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகை மனிதர்களை நொடியில் கொல்லும் திறனுடையது என்றும் அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

* சுங்கத்துறை விளக்கம்
சென்னை துறைமுகத்தில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கிறது. லெபனானில் நடந்தது போன்று சென்னையில் வெடிவிபத்து நடக்காது. அம்மோனியம் நைட்ரேட் குறித்து மக்களிடத்தில் அச்சம் தேவையில்லை. தற்போது கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ-ஆக்‌ஷன் முறையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளதாகவும் சுங்கதுறை விளக்கம் தெரிவித்துள்ளது.

* தீயணைப்பு துறை டிஜிபி ஆய்வு
அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தமிழ்நாடு தீயணைப்புதுறை டிஜிபி சைலேந்திரபாபு தனது தீயணைப்பு வீரர்களுடன் நேற்று மதியம் சென்றார். அங்கு அந்த கெமிக்கல் வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்தார். அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

Tags : Beirut ,Chennai ,panic ,port warehouse , Beirut, Chennai, intimidation, port warehouse, 740 tons of ammunition, 6 year stock, public panic
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...