×

சீன படைகள் முழுவதுமாக வாபஸ் பெறும் வரை தனது படைகளை திரும்பப் பெற மாட்டாது: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு..!!

டெல்லி: லடாக் எல்லையில் உள்ள  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் கடந்த மே மாதம் ஊடுருவியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பதற்றம் நிலவி வந்த நிலையில் ஜூன் 15ம்தேதி இரு நாட்டு வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் 35 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் இருநாட்டு எல்லை முழுவதும் போர் மேகம் சூழ்ந்தது. இரு தரப்பும் எல்லையில் படைகளை குவித்ததால் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில், அங்கு படைகளை விலக்கி அமைதியை மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தரப்பும் ராணுவ மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. அடுத்தடுத்து நடந்த இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் இருநாட்டு எல்லை விவகாரங்களுக்கான பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன வெளியுறவு மந்திரி இருவரும் கடந்த மாதம் 5ம் தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, கடந்த மாதம் 6ம் தேதி முதல் கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கி வருகின்றன.  எனினும் பங்கோங்சோ உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் படை விலக்கல் முற்றுப்பெறவில்லை என்று தகவல் வெளியானது.

இதனையடுத்து, இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள மோல்டா என்ற இடத்தில் சீன எல்லைக்குள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இந்த இருதரப்பு ராணுவ ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போதும், இந்தியா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என சீன தரப்பில் இருந்து பலமுறை வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், எல்லையில் இந்திய போர்விமானங்களின் நடமாட்டம் குறித்தும், இந்தியா சாலை அமைப்பதை குறித்தும் சீனா புகார் தெரிவித்த தாகவும், ஆனால் கட்டமைப்பு பணிகள் பல ஆண்டுகளாக நடப்பதை இந்தியா சுட்டிக்காட்டியபின்னர் சீன தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. பாங்கோங் ஏரி தொடர்பான எல்லைப் பிரச்சனையில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதில் இந்தியா அவசரம் காட்டாது என்று சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : China ,withdrawal ,India ,troops , Chinese forces, Ladakh border, withdrawal, India
× RELATED இறுதிகட்ட பரிசோதனையில் 4...