சாத்தூர் அருகே குடோனில் பயங்கர தீ; ரூ.20 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பல்: 6 வீடுகளும் சேதம்

சாத்தூர்: சாத்தூர் அருகே தீப்பெட்டி குடோனில் நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகின. 6 வீடுகளும் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (47). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் சடையம்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த குடோனில், சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் சேமிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. மின்கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த குடோனில் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது.

அருகில வீடுகளில் வசித்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 1 மணிநேரம் போராடியும் அணைக்க முடியவில்லை. சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டையில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகின. குடோன் அருகில் இருந்த 6 வீடுகளும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>