தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து கப்பலில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், கோவாக்சின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட 14 நாட்கள் பரிசோதனை வெற்றி அடைந்ததையடுத்து இன்று எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த கோவாக்சின் பரிசோதனை வெற்றியில் முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட 2 வீரர்களும் கடலோர பாதுகாப்புப்படை குடியிருப்பில் உள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.