கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது!: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சேலம்: கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் கபினியில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு தற்போது 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா ராஜா சாகர அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த காலை ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்நிலையில் தற்போது கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. அடிபாலாற்றில் பெருக்கெடுத்து வரும் உபரி நீர் நுரைபொங்க வந்து கொண்டிருக்கிறது.  

சில இடங்களில் மீனவர்களின் பரிசல்களையும், வலைகளையும் காவிரி நீர் இழுத்து சென்றுள்ளது. காடு மலைகளை கடந்து வரும் காவிரியில் பெரிய மரங்களும் அடித்து வரப்பட்டன. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால் செட்டிபட்டி, கோட்டையூர், பத்மாவாடி பரிசில் துறைகளில் பயணிகளை ஏற்றி செல்லும் படகு போக்குவரத்துக்கு தடை விதிட்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்த நாட்களிலும் தொடர்ந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் 64 அடியாக சரிந்திருந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் அச்சமடைந்திருந்தனர்.

தற்போது கர்நாடக அணைகளில் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்திருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27.91 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: