×

ஆட்சிப் பணிகளில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம் :யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து

சென்னை : ஆட்சிப் பணிகளில் இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகின்றது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஆக.6) வெளியிட்ட அறிக்கை:

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுச் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கன்னியாகுமரி கணேஷ் பாஸ்கர், இந்திய அளவில் 7 ஆம் இடம், ஆர்.ஐஸ்வர்யா 47 ஆம் இடம், எஸ்.பிரியங்கா 68 ஆம் இடம் பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கின்றனர்.

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணி (பரிமளம் மகள் வழிப் பேத்தி), அனைத்து இந்திய அளவில் 171 ஆவது இடத்தைப் பெற்ற செய்தி அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். நேற்று அவரைத் தொடர்பு கொண்டு பேசி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். குடும்பத்தினர் அனைவரோடும் பேசினேன்.

பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் பூர்ணசுந்தரி, பாலநாகேந்திரன் ஆகிய இருவர் வெற்றி பெற்று இருப்பது தன்னம்பிக்கையைத் தருகிறது. அவர்களில் பூர்ணசுந்தரி இந்திய அளவில் 286 இடத்தைப் பெற்று வெற்றி பெற்று இருப்பது பெரும் ஊக்கம் அளிக்கின்றது.

கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே, ஆட்சிப் பணிகளில், இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகின்றது.

நாடு விடுதலை அடைந்தபோது, மத்திய அரசின் ஆட்சிப்பணிகளில், பெருமளவில் தமிழர்கள் இடம் பெற்று இருந்தனர். உயர் அதிகாரிகளாக, பல்வேறு சாதனைகளைப் படைத்தனர்.

அது மட்டும் அன்றி, அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளிலும் (Staff Selection Commission) தமிழகத்து இளைஞர்கள் பெருமளவில் வெற்றி பெற்று வந்தனர். பின்னாட்களில், அந்தத் தேர்வுகளில் தமிழகத்து இளைஞர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.

படிப்படியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆட்சிப் பணிகளில் தமிழகத்தின் பங்கேற்பைத் திட்டமிட்டுக் குறைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், பெருமளவில் வட இந்தியர்களைக் கொண்டு வந்து புகுத்துகின்றனர்.

மேலும், தமிழகத்து இளைஞர்கள், மருத்துவம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால், ஆட்சிப் பணித் தேர்வுகளில் வெற்றி விழுக்காடு குறைந்து வருகின்றது.

காலப்போக்கில், இது தமிழகத்திற்குக் கேடாக அமையும். அரசின் திட்டங்களை வகுக்கின்ற அதிகார மையத்தில், தமிழகத்தின் பங்கு வெகுவாகக் குறைந்து விடும்.

எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில், ஆட்சிப் பணித் தேர்வுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, உரிய இடங்களைத் தமிழகம் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இம்முறை வெற்றி பெற்று இருக்கின்றவர்கள், தங்கள் துறைகளில் புதிய சாதனைகளைப் படைத்து, பேரும் புகழும் பெற்றிட, மதிமுகவின் சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,UPSC ,Vaiko ,India , Governance, India, Guide, Tamil Nadu, UPSC, Victory, Vaiko, Greetings
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...