×

துப்பாக்கிச்சூடு விவகாரம்.: திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

சென்னை: சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கைதான திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதியன்று, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் குமார் ஆகியோர் கோவில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். அப்போது, திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. இதையடுத்து, லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டபோது ஒரு குண்டு காரிலும் மற்றொரு குண்டு ஸ்ரீனிவாசன் என்பவர் முதுகில் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட  11 பேரையும், எதிர்தரப்பில் 6 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதயவர்மன் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சத்தை நன்கொடையாக அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட இதயவர்மனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதயவர்மனுடன் கைதான 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கைதான 11 பேருக்கு தலா ரூ.10,000க்கான சொந்த ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Chennai High Court ,Thiruporur MLA , Gunshot, Thiruporur, MLA, Chennai High Court, Bail
× RELATED அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை...