×

சூளேஸ்வரன்பட்டியில் சூறாவளிக்காற்று ராட்சத மரம் முறிந்து விழுந்தது: ஒருவர் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது. இதில் சில நாட்களாக பகல் மட்டுமின்றி இரவிலும் மழை பெய்துள்ளது. அதிலும் நேற்று முன்தினம் இரவிலிருந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நேற்று காலையிலிருந்து மழையை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து சில மணி நேரம் பலத்த காற்று வீசியது. இதனால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கோட்டூர் ரோடு சூளேஸ்வரன்பட்டியில் நின்ற ராட்சத மரம் சூறாவளிக் காற்றுக்கு தாக்கு பிடிக்க  முடியாமல் வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தது.
 
அந்நேரத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நல்லூரை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் மீது மரக்கிளை விழுந்துள்ளது. அதில் நிலைகுலைந்த அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடுரோட்டில் விழுந்த மரத்தால், அந்த வழியாக இருபுறத்திலும் வந்த வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அந்த வழியாக சென்ற மின்கம்பிகள் சேதமடைந்தடன், மின்தடை ஏற்பட்டது. உடன் சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி  அப்புறப்படுத்தினர். அதன்பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. 


Tags : Cyclone , Suleswaranpatti, hurricane, one injured, transport
× RELATED ஒவ்வொரு தொகுதியாக சென்று தமிழக...