×

திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் பயோமெட்ரிக் முறையில் அதிகாரிகள் கெடுபிடி: நெட்வொர்க் பிரச்னையால் கடும் சிரமம்

திருச்சி: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் பயோமெட்ரிக் (கைரேகை பதிவின்படி) மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டது. இதன் மூலம் ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் ரேஷன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு இயந்திரத்தில் கைரேகையினை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் பெற்றுச் செல்ல வேண்டும். இதன் மூலம் அந்த குடும்ப உறுப்பினரை தாண்டி வேறு யாரும் ரேஷன் பொருட்களை பெற முடியாது. இதனால் ரேஷன் பொருட்கள் நேரடியாக வேறு ஒருவருக்கு விற்கவோ, முறைகேடு செய்யவோ முடியாது.

தமிழக அரசு பரீட்சார்த்த முறையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பயோ மெட்ரிக் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் நேற்று துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் 850 முழுநேர மற்றும் 350 பகுதி நேர என 1,224 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கைரேகை பதிவு இயந்திரம் செயல்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டது. சோதனை ஓட்ட முறையில் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் கைரேகை பதிவு பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி (நேற்று) முதல் துவங்கியது. ரேஷன் கார்டுதாரர்கள் முககவசம் அணிந்து ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு கைரேகை பதிவு இயந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களும் கிருமிநாசினி கொண்டு தங்கள் கைகளை சுத்தப்படுத்தி கொண்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், முதல் நாளான நேற்று நெட்வொர்க் கிடைக்காமல் விற்பனையாளர்கள் அவதியடைந்தனர். பலரும் தங்களது மொபைல்போனில் உள்ள நெட்வொர்க்கை பயன்படுத்தி இப்பணியை மேற்கொண்டனர்.

கொரோனா ஊரடங்கால் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில் நெட்வொர்க் பிரச்னையால் டோக்கன் பெற்ற அனைவருக்கும் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் எஞ்சியவர்களுக்கு மறுநாள் வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் கிருமி நாசினி பயன்படுத்துவதில்லை. இதன் மூலம் எளிதில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையை அமல்படுத்தினால் நலமாக இருக்கும் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Trichy ,Perambalur ,Ariyalur , Trichy, Perambalur, Ariyalur, Biometric System, Network
× RELATED பஞ்.தலைவர்கள் தொடர்ந்த வழக்கால்...