×

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை துறைமுகம் அருகே கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பைரூட்டில் உள்ள துறைமுகத்தில் 2450 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த சம்பவம் நேற்று உலகளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வெடிபொருட்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சுமார் 6 ஆண்டுகாலமாக லெபனான் துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அது முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தான் வெடித்தது என்று சர்வதேச அளவில் செய்தி வெளியான நிலையில், தற்போது சென்னை துறைமுகத்திலும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட், 37 கண்டெய்னரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு கொரியாவில் இருந்து அமோனியம் நைட்ரேட் 740 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கரூரை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால் அதற்கு உரிய அனுமதி பெறாத காரணத்தினால் அதனை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய  வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!. சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! , என கூறியுள்ளார்.



Tags : warehouse ,Chennai ,Ramadas , Chennai Warehouse, Ammonium Nitrate, Ramadas
× RELATED ஆங்கிலேயர்களை வீழ்த்திய தீரன்...