×

நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்ச மழைப் பொழிவு: ஒரே நாளில் 58 செ.மீ. மழை பதிவாகி சாதனை!!

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி தமிழகத்தின் சிரபூஞ்சி என்ற பெயரை எடுத்துள்ளது. ஒரே நாளில் 58 செ.மீ மழை அங்கு கொட்டியுள்ளதே இதற்கு காரணமாகும். மேட்டுப் பாளையத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் மழைப் பெய்யக் கூடிய இடம் தான் அவலாஞ்சி. அவலாஞ்சி இருக்கக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்கு புதன்கிழமை காலை 7 மணி முதல் வியாழன்கிழமை காலை 7 மணிக்குட்பட்ட 24 மணி நேரத்திற்குள் 58 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 33 செ.மீ. மழையும், மேல் பவானியில் 32 செ.மீ.மழையும், நடுவட்டம் 23 செ.மீ. மழையும், தேவாலாவில் 22 செ.மீ. மழையும், கிளென்மார்கனில் 21 செமீ மழையும் பந்தலூரில் 18 செமீ மழையும் பெய்துள்ளது. இதனிடையே ஒடிசா மற்றும் வங்கதேச கடற்பகுதியை ஒட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைச் சரிவில் அதிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

இதனிடையே இந்தியாவிலேயே நடப்பு ஆண்டில்  ஒரே நாளில் மிக அதிகபட்சமாக அவலாஞ்சியில் தான் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்திய அளவிலேயே ஒரே நாளில் பதிவான அதிகப்படியான, மழைப் பதிவு இதுதான். அவிலாஞ்சி என்பது, நீர் பிடிப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதி கிடையாது. எனவே, நேரடியாக மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடும் குளிர் வாட்டுகிறது.

Tags : Avalanche ,Nilgiris ,India , India, Avalanche, high rainfall, record
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...