×

லால்குடியில் கடும் சூறாவளி காற்று கட்டிட மேற்கூறை கைபிடி சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்: சம்பவ இடத்தை கலெக்டர் ஆய்வு

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி ரெயில்வே மேம்பாலம் கீழே திருவள்ளுவர் நகர் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. மேம்பாலம் கட்டும்போது கட்டிடத்தில் முன்புறம் உள்ள இடங்கள் இடிக்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில் கட்டிடத்தை பழுதுபார்த்து மேற்கூறை கைபிடி சுவர்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்தின் அருகே உள்ள சாலையில் தான் பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மேம்பாலத்தில் கீழே உள்ள சாலையில் தான் சென்று வருகின்றனர். கட்டிடத்தின் முதல் தளத்தில் மற்றும் தரை தளத்தில் பல்வேறு கடைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று பலத்த காற்று வீசவே கட்டிடத்தின் மேல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்ற ஆங்கரை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தாஸ் மகன் எபிநேசன் (14), கனகராஜ் மகன் சஞ்சய் (13) மற்றும் தரைதளத்தில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் மகள் கவிதா, இடிந்த கட்டிடத்தின் கடையில் பொருட்கள் வாங்க வந்த கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த கமலகண்ணன் மகள் நிஷாந்தி ஆகியோர் படுகாயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் எபிநேசன் மற்றும் சஞ்சய் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா. மேலும் லால்குடி பகுதிக்கு ஆய்வு செய்ய வருகை தந்த கலெக்டர் சிவராசு சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின் விநியோகத்தினை நிறுத்தி வயர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மின்விபத்துகள் தடுக்கப்பட்டது. இது குறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் துறையூர் ரோட்டில் பூனாம்பாளையம் பகுதியில் பலத்த காற்றுக்கு நேற்று புளிய மரம் ஒன்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்தது. அப்போது பைக்கில் சென்ற கொள்ளிடம் டோல்கேட் பகுதியை சேர்ந்த சக்திவேல் (23) என்பவர் காயமடைந்தார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புளியமரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

பட்டுபோன மரங்கள் அகற்றப்படுமா?
மண்ணச்சநல்லூர் பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 10 மரங்கள் காற்றுக்கு சாய்ந்துள்ளன. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது காற்றடி காலம் என்பதால் பட்டுப்போய் உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lalgudi: Collector ,wall collapse , Lalgudi, Hurricane Wind, Collector
× RELATED அரியலூரில் கனமழை காரணமாக வீட்டின்...