×

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து சென்னை உயர் நீதிமன்றம் திறக்கப்படும்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தகவல்

சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர்  சென்னை உயர் நீதிமன்றம் திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாகவே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. நேரடி நீதிமன்றங்கள் திறக்கப்படாததால் வக்கீல்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ள நிலையில் வக்கீல்கள் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை திறக்க வேண்டும், வக்கீல்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

ஆன்லைனில் வழக்குகளை விசாரிக்கும் போது வக்கீல்களுக்கு வாய்தா வழங்க வேண்டும். அதற்கு மாறாக மனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.சுதா, ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அவர்களிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்ததாக சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : AB Sahi ,Chennai High Court ,Chief Justice ,Supreme Court ,AB Sahi Chennai High Court , Supreme Court, Chief Justice, Consulting, Chennai High Court, to be opened, Chief Justice AB Sahi, Information
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...