×

கரூர் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ், ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா: விடுமுறை அளிக்க எஸ்பி மறுப்பு; நோயுடன் பணிபுரியும் அவலம்

சென்னை: கரூர் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பணியாளர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தொடர்ந்து பணியாற்றும்படியும் விடுமுறை எடுக்க வேண்டாம் என்றும் எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் உடனடியாக பரிசோதனை நடத்தி மருத்துவமனையில் சேர்த்து வருகின்றனர்.

உடல்நிலை நன்றாக உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், பலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட நாட்கள் முடியும்வரை வீட்டில் இருந்து வெளியில் வரக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதோடு வீட்டு முன்பு தட்டிகளால் அடைத்து வைத்து விடுகின்றனர். இந்நிலையில், கரூர் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களுக்கு மொத்தமாக பரிசோதனை நடத்தப்பட்டன.

அதில் எஸ்பி பகலவனின், எழுத்தர், உதவியாளர், பாதுகாவலர்கள் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்று 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றுகிறவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை எஸ்பி பகலவனின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரோ, நான் சென்னையில் பணியாற்றியவன். அதிகாரிகள் பலருக்கே கொரோனா வந்தது. அவர்கள் பலர் பரிசோதனை செய்யவே இல்லை. பணிக்கு வந்து கொண்டுதான் இருந்தனர். அதேபோலத்தான், நீங்களும் தொடர்ந்து பணிக்கு வரவேண்டும். யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல், மூச்சுவிட சிரமம் உள்ளவர்கள் மட்டும் விடுமுறை எடுக்கலாம். மருத்துவமனையில் சேரலாம். ஏ சிம்டம்ஸ் உள்ளவர்கள் வழக்கம்போல பணிக்கு வரவேண்டும் என்று கூறிவிட்டார்.

இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 30 பேரும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் 30 பேரும் தனிமைப்படுத்தப்படாததால், அவர்களது குடும்பத்தினர், அவருடன் பணியாற்றும் மற்றவர்கள், புகார் கொடுக்க எஸ்பி அலுவலகம் வரும் பொதுமக்கள், மற்ற காவல்நிலையங்களில் இருந்து அலுவல் பணி காரணமாக வரும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கும் பரவ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும். சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Tags : office ,police personnel ,Karur SP ,Corona , Karur SP office, working police, staff, corona for 30 people, holiday, SP denial
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்