×

போதையில் தகராறு ரவுடி சரமாரி குத்தி கொலை: வாலிபர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடி வலைகளை மீனவர்கள் சரிசெய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. இதைக்கண்டு  அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுத்து அறுக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையானவர் பற்றி விசாரித்தனர்.

அதில், அவர் திருவொற்றியூர் கன்னி கோயில் பகுதியை சேர்ந்த ஆனந்த் (45). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், திருமணம் செய்யாமலே, அப்பகுதியில் நீண்ட காலமாக கணவனால் கைவிடப்பட்ட கல்பனா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது நண்பரான இம்ரான் (24) மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு குடும்பம் இல்லாததால், ஆனந்தின் வீட்டில் அடிக்கடி தங்குவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இருவரும் கடற்கரையில் மது அருந்தினர். அப்போது, போதை தலைக்கேறியதும், குற்ற வழக்கு தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த கத்தியால் இம்ரானை குத்த முயன்றார். இதில், சுதாரித்து கொண்ட இம்ரான், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து ஆனந்த்தின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ஆனந்த் மயங்கி கிழே விழுந்தார். பின்னர் ஆனந்த்தை, இம்ரான் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே ஆனந்த் பரிதாபமாக ரத்த வௌ்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் இம்ரான் அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இம்ரானை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : death ,Rowdy , Intoxication dispute, rowdy, stabbing murder, juvenile, arrested
× RELATED விஷவாயு தாக்கி வாலிபர் சாவு