×

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தில் அனைத்து செம்மொழி ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும். அதே நேரத்தில், பல்கலைக்கழகத்திற்குள்ளாக அவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணம் மிகவும் வினோதமானது.  செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது தனித்து செயல்பட்டால் தான், அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது.

ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து விட்டு, தனித்த ஆராய்ச்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டுமாம். மொழிக்கு ஒரு நீதி என்பது எவ்வகையில் நியாயம்? உலக அளவில் செம்மொழி தகுதி பெற்றவை தமிழ் உள்ளிட்ட 7 மொழிகள் தான். அவற்றில் லத்தீன் மொழி அழிந்து விட்ட நிலையில், மீதமுள்ளவற்றில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும் தான். எனவே தமிழை பெருமைப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டும் தான் அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Institute of Classical Tamil Studies ,University ,Ramadas , Institute of Classical Tamil Studies, University, Unacceptable, Ramadas Condemned
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...