×

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: நந்திவரம் ராஜீவ்காந்தி நகரில் 22 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, வண்டலூர் தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்டலூர் தாசில்தார் செந்திலிடம் நேற்று மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 22 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் வீட்டு வரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, மின்சார அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. ஆனால், இலவச வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கவில்லை.

இதனால், அரசு சார்பில் கிடைக்கும் இலவச தொகுப்பு வீடுகள், தனிநபர் கழிப்பறை வசதிகள் உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்க பெறாமல் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக, முன்பு காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, செங்கல்பட்டு வட்டாட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எவ்வித பயனும் இல்லை. தற்போது, செங்கல்பட்டில் இருந்து, தனி தாலுகாவாக பிரித்து, வண்டலூர் புதிய வட்டமாக செயல்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதி மக்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Free housing lease, public, request
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்