×

மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: படுகாயம் அடையும் வாகன ஓட்டிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சாலைகளில், இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை, கறவை நேரம் போக மற்ற நேரங்களில் சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் ஜாலியாக உலா வருகின்றன.

இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு செல்வோர், தனியார் கம்பெனிகளில் ஷிப்ட் முடிந்து வீடு திரும்புவோர் உள்பட பலரும் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும், மாடுகள் முட்டி தள்ளுகின்றன. இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில், நடுரோட்டில் படுத்து உறங்கும் மாடுகளால், தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் வேன், ஷேர் ஆட்டோ, உதிரி பாகங்கள் ஏற்றி செல்லும் லாரி உள்பட பல வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பெரும்பாலும், காலை நேரங்களில் பூஞ்சேரி நான்கு முனை சந்திப்பு, டோல்கேட் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் பையனூர் ஆகிய இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் அதே தவறை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

* ஒருமையில் பேசும் அலுவலர்கள்
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம், பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் கண்டும், காணாமல் உள்ளனர். மேலும், புகார் தெரிவிக்கும் பொதுமக்களை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள், ‘‘நாளை வா, நாளை  மறுநாள் வா, செயல் அலுவலர் இல்லை போய் வா, போ’’ என ஒருமையில் பேசுகின்றனர். எங்களுக்கு தலைக்கு மேல் வேல இருக்கு. மொதல்ல இங்கிருந்து கெளம்பு என கூறுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.


Tags : motorists ,accidents ,roads ,Mamallapuram , Mamallapuram, night time, road, stray cow, accident, motorists
× RELATED செங்குன்றம் அருகே சாலையில் திரியும்...