புழல்: சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இவற்றை அதிகாரிகள் உடனடியாக தடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சோழவரம் அருகே காரனோடை, ஆத்தூர், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றில் அடிக்கடி மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இங்கு பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளப்பட்டு, அங்கு மேடான பகுதிகளில் அடுக்கிவைத்து, அங்கிருந்து லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே மரண பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதுகுறித்து வருவாய், காவல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், மணல் கொள்ளையை தடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக தடுக்க வேண்டும். இல்லையேல், ஜனப்பன்சத்திரம் ஜிஎன்டி கூட்டு சாலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.