×

திருமுல்லைவாயலில் பராமரிக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படாமல் அடைப்பு ஏற்பட்டு கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாயில் நிரம்பி சாலையில் ஆறாக ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வீடுகள் அமைந்துள்ளன. இச்சாலையை பயன்படுத்தி, ஆவடி சுற்று வட்டாரப் பகுதியில்  இருந்து அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி மற்றும் சென்னை மாநகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும், இச்சாலையில் இரு புறங்களிலும் மழைநீர் செல்வதற்காக கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், மழைநீர் கால்வாய், கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த கால்வாயை, கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் தூர் வாராமல் கிடப்பில் போட்டுள்ளது. தற்போது, கால்வாய் பல இடங்களில் மண் குவிந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது, இதனால், கால்வாயில்  கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லமுடியாமல் வெளியேறி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழம்பேடு மெயின் ரோட்டில் உள்ள கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டது. இந்த கால்வாயை அடிக்கடி பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது, கால்வாய் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகிறது. தற்போது, கொரோனா தொற்று காரணமாக பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொசுக்கடியால் ஏற்படும் காய்ச்சலாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனி மேலாவது திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள கால்வாயை தூர்வாறி சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் தங்கு தடையின்றி செல்லவும் போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Tags : Thirumullaivayal, sewerage, health disorder, public blame
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...