×

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருமாவளவன் சகோதரி மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி நேற்று மரணமடைந்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், சமூக சேவகர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. சிலர் உயிரிழந்து வருவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி (62), சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் அவர் உயிரிழந்தார். இறந்த பானுமதியின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பானுமதியின் மறைவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : sister ,leaders ,Death ,Thirumavalavan ,Corona , Corona, treatment, Thirumavalavan, sister death, political leaders, condolences
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...