×

தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அமைச்சர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சமீப காலமாக பங்கேற்ற நிகழ்ச்சிகளில் உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. அந்த இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது உரிய கொரோனா தடுப்பு, பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, முதலமைச்சர் தனது கடமையை செய்து வருகிறார். மனுதாரர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பல பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அபராதமும் விதித்துள்ளது. இன்னும் அந்த அபராதத் தொகை கட்டவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு விழாக்களில் பங்கேற்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.ஆனால் தனியார் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் போது தகுந்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Ministers ,events ,iCourt , Private show, ministers, corona protection, follow, iCourt
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...