×

யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் தளங்களில் பதிவிடும் வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சுதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை. எனவே, திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப்போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Tags : board ,state governments , YouTube, Facebook, Twitter, Posting Video, Audit, Board Case, Federal, State Governments, iCourt
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...