×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

* 12 ஆயிரம் பேர் பங்கேற்றதால் கொரோனா பணிகள் முடக்கம்
* விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
* வருவாய்த்துறை ஊழியர் சங்கம் அறிவிப்பு


சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 12 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது கோரிக்கையை அரசு ஏற்கா விட்டால் அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுவோம் வருவாய்த்துறை ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் கடந்த 4 மாதங்களாக சுகாதாரத்துறை உடன் இணைந்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் சிலர் கொரோனவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தனர். ஆனால், அந்த ஊழியர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை.

இதையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கையுறை, முககவசம், சானிடைசர் வழங்க கோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 5, 6ம் தேதிகளில் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த ஜூலை 25ம் தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில் போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், வருவாய் நிர்வாக ஆணையர் அரசிடம் பேசி முடிவு சொல்வதாக கூறினார். ஆனால், தற்போது வரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து திட்டமிட்டப்படி தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும், வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை, 12 ஆயிரம் அலுவலர்களும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல வகையான சான்றிதழ் வருவாய்த்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார்கள் தான் அனுமதி அளிக்க வேண்டும்.

நேற்று அவர்கள் பணிக்கு வராததால் அந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், தாலுகா அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் பலரும் ஊழியர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் யாரும் பணிக்க வராததால், அந்த பணிகள் முற்றிலும் முடங்கி போனது. இந்த நிலையில் எங்களது கோரிக்கை ஏற்காவிடில் அடுத்த கட்டமாக கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

Tags : Various demand, contingency leave, struggle
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...