×

ஐஏஎஸ் தேர்வில் மாடல் அழகி, நடிகர் மகன் சாதனை

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்தாண்டு நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா ஷெரான் தேசிய அளவில் 93வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐஸ்வர்யா ராய் போல் மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்பதற்காக என் அம்மா எனக்கு ஐஸ்வர்யா என பெயர் சூட்டினார். மிஸ் இந்தியா போட்டியில் நான் 21 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு பெற்றேன். மாடலிங்கில் இருந்தாலும், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு. அதற்காக மாடலிங்குக்கு கொஞ்சம் பிரேக் விட்டு படிக்க ஆரம்பித்தேன். எந்த கோச்சிங் கிளாசிலும் சேரவில்லை. வீட்டிலேயே படித்தேன். மொபைல் போன், சோஷியல் மீடியா பக்கமே போகவில்லை. அதன் பலன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். படிப்பின் மீது எனக்கொன்றும் திடீர் ஆர்வம் ஏற்பட்டுவிடவில்லை. சிறு வயதில் இருந்தே நான் படிப்பில் படுசுட்டி . இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த், சில படங்களையும் இயக்கி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அளவில் அவருக்கு 75து இடம் கிடைத்துள்ளது. ஸ்ருதன்ஜெய் அடையார் சிஷ்யாவில் பள்ளி படிப்பையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பையும், டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பும் படித்துள்ளார். இது குறித்து சின்னி ஜெயந்த் கூறியதாவது: சின்ன வயதில் இருந்தே அவனுக்கு படிப்பின் மீதுதான் ஆர்வம். கர்நாடக இசை பாடகன். சிவில் தேர்வு அவனது கனவாக இருந்தது. இப்போது அந்த கனவு நனவாகி உள்ளது என்றார். ஸ்ருதன்ஜெய்க்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : IAS , IAS exam, model beauty, actor's son, record
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு