×

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளியுடன் கனமழை 100 கிராமங்கள் இருளில் மூழ்கின: மரம் விழுந்து ஒருவர் பலி; பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மரம் விழுந்து ஒருவர் பலியானார். மேலும், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 100 கிராமங்கள் இருளில் மூழ்கின. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியிலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத கற்பூர மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஊட்டி - கூடலூர் சாலையில் தலைகுந்தா முதல் நடுவட்டம் வரையில் சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவு கூரை மீது மரம் விழுந்தது. தமிழகம் மாளிகை அருகேயுள்ள கலெக்டர் வீட்டின் வீட்டின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ராட்சத மரம் விழுந்தது. ஆனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஒருவர் பலி: சோலூர் டென்டாண்டல் பகுதியில் பலத்த காற்றுக்கு சாலையில் நடந்து சென்றவர் மீது மரம் விழுந்தது. படுகாயமடைந்த அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஊட்டி, மஞ்சூர், எமரால்டு, இத்தலார் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (80). விவசாயி. இவர் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அவரது தோட்டத்தில் இருந்த பம்ப் செட் தண்ணீரில் மூழ்கியது. அதை கழற்ற சென்றபோது, ஆற்றின் கரையோர மண்திட்டு இடிந்து விழுந்தது. இதனால் ஆற்றில் தவறி விழுந்த அருணாச்சலம் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நொய்யல் ஆற்றில் வெள்ளம்: கோவை நொய்யல் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
 
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. கொடைக்கானல் இருளில் மூழ்கியது: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய மின்பாதையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.

Tags : Bhavani ,villages ,district ,Nilgiris ,floods , Nilgiris District, Cyclone, Heavy rains, 100 villages submerged in darkness, one killed, Bhavani river, farmer
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி