×

ஊரடங்கு காரணமாக நான்கரை மாதமாக மூடியிருந்த உடற்பயிற்சி கூடங்கள் 10ம் தேதி முதல் திறக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்கள் வருகிற 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறிவித்து வந்தாலும் அதேநேரம் பஸ், ரயில்கள், பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர், மால்கள் இயங்க அனுமதி இல்லை. இந்நிலையில் உடற்பயிற்சி கூடம் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சிகூட உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை  பரிசீலித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, மத்திய அரசு தனியார் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5ம் தேதி (நேற்று) முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள், 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் வருகிற 10ம் தேதி (திங்கள்) முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை தொடந்து தமிழகத்தில் 138 நாட்களுக்கு (சுமார் நான்கரை மாதம்) பிறகு வருகிற 10ம் தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட உள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* 15 ஆயிரம் உடற்பயிற்சி நிலையங்கள்
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிட்னஸ் பாரடைஸ் உடற்பயிற்சி நிறுவனர் மகாதேவன் கூறும்போது, “தமிழகத்தில் மொத்தம் 15,000 உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளது. சென்னையில் மட்டும் 3,500 ஜிம் உள்ளது. ஒவ்வொரு உடற்பயிற்சி நிலையங்களும் குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.2 கோடி வரை கூட நவீன உபகரணங்களுடன் ஜிம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருமானம் வரும். இந்த 4 மாதத்தில் உடற்பயிற்சி மையம் வைத்துள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதம் ரூ.1000 முதல் ரூ.2500 வரை வசூலிப்போம். இந்த பணம், வங்கி மூலம் லோன் வாங்கிய கருவிகளுக்கு திரும்ப செலுத்தப்படும். ஆனால் ஜிம் மூடப்பட்டதால் வங்கி லோன் கட்ட முடியாமலும், பயிற்சியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாலும் கஷ்டப்பட்டோம். தற்போது உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்” என்றார்.

Tags : Gymnasiums , Curfew, four and a half months, closed gymnasiums, permission to open from 10th, Government of Tamil Nadu
× RELATED உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு...