×

திருப்பதியில் சிறுத்தை: பக்தர்களை தாக்க முயன்றதால் பீதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது மலைப்பாதையிலும், திருமலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கோயில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் மலைப்பாதை  அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியதால் இப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் தினமும் பக்தர்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேற்று போக்குவரத்து போலீஸ்காரர் முரளி மற்றும் போலீசார் பைக்கில் பணிக்கு சென்றனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை திடீரென போலீசார் மீது பாய்ந்து தாக்க முயன்றது. ஆனால் போலீசார் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அதேபோல் நேற்று மாலை ஒரு பைக்கில் ஆணும், பெண்ணும் சென்றனர். அவர்கள் மீதும் சிறுத்தை பாய்ந்து தாக்க முயன்றது. அதிர்ச்சியடைந்த இருவரும் பைக்கில் வேகமாக சென்றனர். இருப்பினும் சிறுத்தை, அவர்களை விரட்டி சென்றது.

அப்போது அவ்வழியாக பெல்லாரியில் இருந்து காரில் வந்த பக்தர்கள் சிறுத்தையிடம் இருந்து இருவரையும் மீட்டனர். ஒரே  நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மலைப்பாதையில் பைக்கில் செல்பவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Tags : devotees ,Tirupati , Tirupati, the leopard
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை