சேலத்தில் ஆடிப்பெருவிழா பொங்கல் வைபவம் நடக்காததால் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்: சமூக இடைவெளியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி நெகிழ்ச்சி

சேலம்: சேலத்தில் ஆடிமாதத்தில் 22 நாட்கள் நடக்கும்  கோட்டை மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதத்தின் முதல் செவ்வாயில் தொடங்கி, கடைசி செவ்வாயில் நிறைவு பெறுவது ஆடிப்பெரு விழாவின் சிறப்பு. இந்த விழாவையொட்டி அரசு பொருட்காட்சியும் நடத்தப்படும். இதில் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் ஆடி 21ம் தேதி நடக்கும். அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையும் விடப்படும். இந்த நாளில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த வகையில் நடப்பாண்டு பொங்கல் வைபவம் ஆடி 21ம்தேதியான இன்று (5ம் தேதி) நடக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிரொலியால் ஆடிப்பெருவிழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் இருந்தே அம்மனை வழிபடலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் ஒரு சில பக்தர்கள், கோயிலுக்கு வெளியே திரண்டு கண்ணீர் மல்க அம்மனை வழிபட்டு சமூக இடைவெளியுடன் பொங்கல் வைத்ததும், நேர்த்திக்கடன் செலுத்தியதும் சிலிர்ப் பூட்டுவதாக இருந்தது.

இதுகுறித்து கோட்டை மாரியம்மன் கோயில் மூத்த பக்தர்கள் குழுக்களின் நிர்வாகிகள் கூறியதாவது: சேலம் கோட்டை மாரியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி  பெற்றது. எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள், இந்த கோயிலை சுற்றி நடந்துள்ளது. திருமணிமுத்தாற்றில்  பெருவெள்ளம்  வந்தபோதும், காலரா பாதிப்புகள் கடுமையாக இருந்தபோதும் மக்களை காப்பாற்றிய பெருமை கோட்டை மாரியம்மனை சேரும். அதுபோன்ற இக்கட்டான காலங்களில் கூட, இங்கு ஆடிப்பெருவிழா நிறுத்தப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோயில் சீரமைப்பு பணிகளுக்காக இடிக்கப்பட்டது.

அன்று முதல் போதிய உற்சாகம் இல்லாமல் திருவிழா நடந்தது. ஆனால் நடப்பாண்டு கொரோனா பீதியால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எனவே கோயில் சீரமைப்பு பணிகளை துரிதகதியில் முடித்து, வரும் காலங்களில் சீரும், சிறப்புமாக அம்மனுக்கு திருவிழா நடத்த வேண்டும். இதுவே அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை தரும் பரிகாரமாக அமையும். இவ்வாறு நிர்வாகிகள் திரண்டனர்.

Related Stories:

>