×

நீரிலும், நிலத்திலும் செல்லும் அதிநவீன ரோந்து கப்பல் முகாம்; தமிழக-இலங்கை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா?... கோடியக்கரை கடற்கரையில் டிஎஸ்பி தலைமையில் வீரர்கள் குவிப்பால் பரபரப்பு

வேதாரண்யம்: கோடியக்கரை கடற்கரையில் அதிநவீன ரோந்து கப்பலில் வீரர்கள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல் ரோவர் கிராப்ட். இது கடலிலும் மற்றும் நிலத்திலும் செல்லக்கூடியது. இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணி மேற்கொள்ளும். இந்த கப்பல் கோடியக்கரை நிலப்பகுதிக்கு வீரர்களுடன் நேற்று மாலை வந்தது. கோடியக்கரை கடற்கரையில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ரோந்து கப்பல் வந்ததை கேள்விப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று வேடிக்கை பார்த்தனர்.

வழக்கமாக இக்கப்பல் கடலில் மட்டுமே ரோந்து பணி மேற்கொண்டு அவ்வப்போது வந்து செல்லும். தற்போது கோடியக்கரை கடற்கரையில் கப்பல் முகாமிட்டுள்ளது. இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் வந்து பிடிப்பதற்காக வந்துள்ளதா, எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்களை பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளதா, இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததால் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளதா அல்லது இலங்கையில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கமான ரோந்து பணி என்று தெரிவித்தனர். ரோவர் கிராப்ட்டில் ரோந்து பணிக்கு வந்த வீரர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல்படை டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.


Tags : land ,terrorists ,Sri Lanka ,Tamil Nadu ,troops ,beach ,extremists ,Kodiakkara , Sophisticated patrol ship, Tamil Nadu-Sri Lanka, terrorists
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்