கொடைக்கானலில் ஆகாய தாமரையால் அழகு இழக்கும் ஏரி: உடனே அகற்ற கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்களை உடனே அகற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானலின் இதயம் போன்றது நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரி கொடைக்கானலுக்கு அழகினை சேர்ப்பதுடன் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- பைக் ரைய்டிங், நடைபயிற்சி செய்வது என சுற்றுலா பயணிகளுக்கும் சுகமான மறக்க முடியாத அனுபவத்தை தரக்கூடியதாகும். மேலும் இந்த ஏரி நீர் கீழமலையான பெருமாள்மலை, பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட விவசாய பாசனத்திற்கு உதவுவதுடன், பழநி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.5 கிமீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி தற்போது களைச்செடிகளால் பாழ்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவுக்கு பிறகு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ஏரியின் கரையோரங்களில் காணப்பட்ட ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள் தற்போது ஏரி முழுவதும் ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. இதனை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் ஏரியின் அழகு முற்றிலும் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘கொடைக்கானல் ஏரியில் காணப்பட்ட நீர்தாவரங்கள், மஞ்சள் படலத்தை அகற்ற கோரி திமுக உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது நீர்த்தாவரங்களை அகற்றி வந்தது. சில பணியாளர்களை வைத்து சில மணிநேரம் மட்டும் இப்பணியை செய்தால் ஏரியில் நீர்த்தாவரங்களை அகற்றும் பணி முழுமை பெற பல மாதங்களாகி விடும் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதை நகராட்சி கண்டுகொள்ளவே இல்லை. தற்போது ஏரி பார்ப்பதற்கே மோசமான நிலையில் உள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் சிறப்பு திட்டத்தை உருவாக்கி, பணியாளர்களுக்கு உரிய உபகரணங்களை வழங்கி, வல்லுனர்களின் ஆலோசனை பெற்று ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும். இப்பணியில் தன்னார்வலர்கள், சமூகஆர்வலர்கள், பொதுமக்களையும் இணைத்து கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>