×

பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி!!!

நாகை: பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 30ம் தேதி நாகை-மயிலாடுதுறை மாவட்டத்திற்கான கருத்து கணிப்பு கூட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த கூட்டமானது நாகை மாவட்டத்தில் காலை நேரத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை நேரத்திலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மயிலாடுதுறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டமானது சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்னர் நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், மயிலாடுதுறை உறுப்பினர் ராமலிங்கம் என்பவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எம்.எல்.ஏவின் உதவியாளருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றினால் 4 அமைச்சர்கள் உட்பட 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thiruvananthapuram MLA Karunas ,Poompuhar MLA Paunraj , Poompuhar MLA Paunraj and Thiruvananthapuram MLA Karunas have been diagnosed with corona infection.
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி