×

தீயணைப்புத்துறை, வனத்துறையினர் வராததால் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை வாலிபர்களே பிடித்து ஒப்படைத்தனர்: வைரலாகும் வீடிேயா

ஆனைமலை: தீயணைப்புத்துறை வராததால் குடியிருப்புக்குள் புகுந்த மலை பாம்பை வாலிபர்களே பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   பொள்ளாச்சி ஆழியார் எல்.எப். காலனி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு நேற்று முன்தினம் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு, வனத்துறையினர், பாம்புகள் பிடிக்க செல்லும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பாம்புகளை பிடிக்க தீயணைப்பு துறைக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தொடர்பு கொண்டு பேசியதில், தீயணைப்பு துறைக்கு பாம்புகள் பிடிக்க பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் வனத்துறைதான் பாம்புகள் பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனராம்.
 இதனிடையே குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடிக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வராததால், கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கிராம மக்கள் பாம்பை பிடிக்கும் வீடியோ காட்சிகளும், கிராம மக்கள் வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் செல்போனில் பேசும் ஆடியோ பதிவுகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து மிக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு பாம்பை மீட்க வனத்துறையினர் வராமல் அலட்சியம் காட்டுவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், இந்து மக்கள் கட்சி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags : teenagers ,fire department ,residence ,department ,forest department ,apartment , fire, department , teenagers ,entered ,viral video
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...