×

வேதாரண்யத்தில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் வேளாண்மை துறை அலுவலகம்: மரண பயத்தில் அலுவலர்கள்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வேளாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மரண பயத்தில் உள்ளனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வேதாரண்யத்தில் வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது. மிகவும் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் இந்த அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கட்டிடங்கள் அனைத்தும் சிமென்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அலுவலக பயன்பாட்டிற்காக உள்ள கழிவறையும் சிதலமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக அலுவலகத்திற்குள் வருவதால் கட்டிடத்தின் கம்பிகள் துருப்பிடித்து பாழைடந்து போய் உள்ளது. உயிருக்கு பயந்த நிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். நாள் தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த அலுவலகத்திற்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

மேலும் அலுவலகத்திற்கு செல்லும் பாதையிலும் புல் மண்டி காடு போல் கிடக்கிறது. மேலும் வாசலில் உள்ள வேளாண்மைத்துறை போர்டும் முறிந்து விழுந்து அப்படியே கிடக்கிறது. அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரு பாழைடைந்த கட்டிடத்திற்கு செல்வது போல் உள்ளது. மேலும் இந்த அலுவலகத்திற்கென்று ஒரு ஜீப் இயங்கி வந்தது. விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாக சென்று களப்பணியாற்றிடவும் மற்றும் அலுவலக பணிக்கும் இந்த வாகனம் பயன்பட்டு வந்தது. இந்த ஜீப் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உழைத்து தேய்ந்து போன இந்த வாகனம் தற்போது திருஷ்டி பரிகாரமாக அலுவலக வாயிலில் கிடக்கிறது.

உரிய காலத்தில் பழுது நீக்கம் செய்து அந்த வண்டியை பயன்படுத்தாமல் அப்படியேவிட்டதால் தற்போது மடித்துப்போய் காட்சி பொருளாக உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் விதை பொருட்கள் மற்றும் உபகரணங்கள், உரங்கள் ஆகியவற்றை இந்த பழுதடைந்த கட்டிடத்தில் தான் வைக்க வேண்டிஉள்ளது. பழுதடைந்த கட்டிடத்தில் வைப்பதால் மழைமற்றும் இயற்கை இடர்பாடுகளால் விதைநெல்லின் தரம் இடுபொருட்களின் தரமும் குன்றிவிடுகிறது. எனவே உடனடியாக வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும் காட்சி பொருளாக நிற்கும் ஜீப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : office ,building ,Department of Agriculture ,death ,Vedaranyam , Department ,Agriculture,dilapidated b, death
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...